பெரியகுளம் அருகே சலவை தொழிலாளி வீட்டில் பயங்கர தீ


பெரியகுளம் அருகே சலவை தொழிலாளி வீட்டில் பயங்கர தீ
x
தினத்தந்தி 15 July 2017 3:30 AM IST (Updated: 15 July 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே சலவை தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ அடுத்தடுத்து 5 வீடுகளிலும் பரவியது.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து. சலவை தொழிலாளி. இவருடைய மனைவி எலிசபெத். நேற்று மாலை தம்பதியினர் வீட்டில் இருந்த போது, திடீரென தீப்பற்றியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதைப்பார்த்த முத்து குடும்பத்தினருடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

மேலும் பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அவர்களின் வீடு முழுமையாக எரிந்து, பக்கத்தில் வசிக்கும் லட்சுமி, கிருஷ்ணவேணி, காமராஜ், ராமன், இளையராஜா ஆகிய 5 பேரின் வீடுகளுக்கும் அடுத்தடுத்து தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. சம்பவ இடத்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீடுகளில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் அவர்களால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 6 வீடுகளிலும் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் 6 வீடுகளும் முழுமையாக எரிந்து நாசமாகியது. அதில் இருந்த பொருட்களும் சாம்பலாகின.

தீ விபத்து குறித்து முத்து கூறுகையில், நேற்று மாலை வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென வீட்டில் தீப்பற்றியது. எப்படி தீப்பற்றியது என தெரியவில்லை. உடனே எனது குடும்பத்தினருடன் வெளியே வந்துவிட்டேன். தொடர்ந்து மற்ற வீடுகளுக்கும் தீ பரவியது. அவர்களும் உடனடியாக வெளியே வந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்தில் 6 வீடுகளிலும் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி உள்ளன என்றார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story