ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 8–வது ஊதியக்குழு உயர்வை அமல்படுத்த வேண்டும். 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பவானி வட்டக்கிளை சார்பில் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் மாரசாமி, ஊராட்சி ஆணையாளர்கள் சிவசண்முகம், மணிமாலா (கிராமம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க வட்டார தலைவர் கொடிமலர் உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் ஒன்றிய தலைவர் முருகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுப்புலட்சுமி, ஒன்றிய பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் தனுஷ்கோடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் பழனிசாமி, அர்த்தநாதீஸ்வரன், கந்தசாமி, சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணைத்தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் செயலாளர் முருகன், இணைச்செயலாளர் நடராஜன், பொருளாளர் வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.