ஈரோட்டில் பிச்சைக்காரரை கொலைசெய்தவருக்கு ஆயுள் தண்டனை
ஈரோட்டில் பிச்சைக்காரரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பவானி ரோடு கட்டளை கதவணை(பேரேஜ்) பகுதியை சேர்ந்த பெரிய பையன் என்பவருடைய மகன் மினியப்பன் என்கிற ரமேஷ் (வயது 45). இவர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்து மாடுகள் மேய்த்து வந்தார்.
இவர் தங்கி இருந்த வீட்டின் அருகில் பிச்சைக்காரர் ஒருவர் வந்து தங்குவது வழக்கம். அது ரமேசுக்கு பிடிக்கவில்லை. எனவே பிச்சைக்காரரை கண்டித்து வந்தார். ஆனால் பிச்சைக்காரர் தொடர்ந்து அதே பகுதியில் தங்கி வந்தார். இதனால் ரமேசுக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 1–11–2015 அன்று ரமேஷ் நடந்து சென்று கொண்டிருந்தபோது பிச்சைக்காரர் பொதுமக்களிடம் யாசித்துக்கொண்டு இருந்ததை பார்த்தார். உடனே அங்கு சென்று இனிமேல் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.
அவர் ரமேசை ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தினார். இது மீண்டும் 2 பேருக்கும் தகராறை ஏற்படுத்தியது. பின்னர் இரவு ரமேஷ் வீட்டுக்கு சென்றபோது அங்கு பிச்சைக்காரர் உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். ஆத்திரம் அடைந்த ரமேஷ் அங்கு கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து பிச்சைக்காரரின் தலையில் போட்டார். இதில் அவர் இறந்துவிட்டார்.
பின்னர் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மறுநாள் (2–11–2015) அன்று காலையில் ரத்த வெள்ளத்தில் பிச்சைக்காரர் பிணமாக கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அங்கிருந்து இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
வழக்கை நீதிபதி என்.திருநாவுக்கரசு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட மினியப்பன் என்கிற ரமேசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.
கொலை செய்யப்பட்ட பிச்சைக்காரர் யார்? அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.