காங்கேயம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்


காங்கேயம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 July 2017 3:45 AM IST (Updated: 15 July 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து 2 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லேரி என்ற ஊரில் 200–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீரும் இங்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீரும், ஆழ்குழாய் குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டனர். சிலர் சைக்கிள்களிலும், இருசக்கர வாகனங்களிலும் குடங்களை கட்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்தினர் வந்தனர்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கல்லேரியில் காலிக்குடங்களுடன் நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்றும், இல்லையென்றால் அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்றும் கூறினார்கள்.

இதற்கிடையில் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் சிவன்மலை பிரிவிலும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தண்ணீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக காங்கேயம் சென்னிமலை ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு வேறு மின் மோட்டார்கள் கொண்டுவரப்பட்டு அதை பொருத்தும் பணிகள் நடந்தது. மேலும் அந்த பகுதியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் பணிகள் தொடங்கியது.


Next Story