மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 15 July 2017 4:15 AM IST (Updated: 15 July 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

மதுரை

இந்தியா முழுவதும் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்களுக்கு உடனே சேமிப்பு பணத்தை திரும்பி வழங்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, வாடிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் நேற்று பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை அருகே கூடினர். வாடிக்கையாளர் நல சங்க உதவிச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், மதுரை மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் மூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக ரெயில் நிலையம் கிழக்கு நுழைவுவாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை ரெயில் நிலையத்திற்கு உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரெயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பெண்கள் உள்பட 900–க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.


Next Story