ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2017 4:15 AM IST (Updated: 15 July 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தினோம். இதையடுத்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தன. இந்தநிலையில் அதே பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே இதை கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் வருகிற 15–ந்தேதி(இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்தோம். ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜராகி, "மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கும் சின்னப்பா பூங்கா அருகில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி போன்றவை உள்ளன. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" என்றார்.

இதனையடுத்து புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

விசாரணை முடிவில், புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில் நாளை(அதாவது இன்று) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் நெடுவாசல் போராட்டக்குழுவினர் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை போலீசார் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story