நடுப்பரவானாறு–கீழ்பரவனாறு இடையே இணைப்புக்கால்வாய் அமைக்கும் பணியை தரமாக செய்ய வேண்டும்
நடுப்பரவனாறு–கீழ்பரவனாறு இடையே இணைப்புக்கால்வாய் அமைக்கும் பணியை தரமாக செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார்.
கடலூர்,
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வாலாஜா ஏரிக்கு வருகிறது. வாலாஜா ஏரியின் உபரிநீரும் மற்றும் செங்கால் ஓடையின் உபரிநீரும் சேர்ந்து நடுப்பரவனாற்றின் மூலம் பெருமாள் ஏரிக்கு செல்கிறது.
மழைவெள்ள காலங்களில் நடுப்பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரையோரமுள்ள பூதம்பாடி, பரதம்பட்டு, கும்முடி மூலை, ஆடூர் அகரம், பூவாலை மற்றும் குண்டியமல்லூர் போன்ற கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. மேலும் பெருமாள் ஏரி மற்றும் அதன் பாசன பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.
எனவே இந்த பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடுப்பரவனாற்றில் இருந்து கீழ் பரவனாற்றுக்கு இணைப்புக்கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்புக்கால்வாயின் கரைகளை பலப்படுத்தும் பணி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மற்றும் வடிகால் மதகு அமைக்கும் பணி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் ராஜேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும். அடுத்த 15 நாட்களில் மீண்டும் வந்து பார்வையிடுவேன் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, தாசில்தார் ஜான்சிராணி, வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பூவராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.