தா.பேட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கிளி ஜோதிடர் கழுத்தை அறுத்துக்கொலை
தா.பேட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கிளி ஜோதிடர் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். தந்திரமாக பேசி வீட்டுக்கு வரவழைத்து அவரை தீர்த்து கட்டியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தா.பேட்டை,
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த கண்ணனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது30). ஜோதிடர். இவர் ஊர்,ஊராக சென்று கிளிஜோதிடம் சொல்லும் தொழில் பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பெரம்பலூர் பகுதியை சேர்ந்த தேவி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் கண்ணனூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதே போன்று கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பாப்பக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவரும் கிளிஜோதிடம் பார்த்து வந்தார். இதையடுத்து முருகன், ராமராஜ் இருவரும் தொழில் ரீதியாக நண்பர்களானார்கள்.
முருகன் கிளிஜோதிடம் பார்க்க செல்லும்போது மனைவி தேவியையும் அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது தேவியுடன் ராமராஜிக்கு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக முருகனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தனது மனைவி தேவியை கண்டித்தார்.ஆனாலும் இருவரும் தொடர்ந்து பேசி கள்ளக்காதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலயில் நேற்று முன்தினம் முருகன் தனது நண்பர் ராமராஜை தந்திரமாக பேசி கண்ணனூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து இரவு வீட்டிற்கு வந்த ராமராஜியிடம் பேசிக்கொண்டிருந்த முருகன், அவரது உறவினர் முருகேசன், தேவி ஆகியோர் திடீரென ராமராஜ் கை,கால்களை கட்டி கீழே தள்ளினர். பின்னர் சேலையால் கழுத்தை நெரித்து, கத்தியால் கழுத்தை அறுத்தனர்.இதில் ராமராஜ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து போனார். பின்னர் முருகன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். முருகனின் வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அருகில் வசித்து வந்த நடராஜன் அங்கு சென்றுபார்த்தபோது ராமராஜ் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் விரைந்து சென்று ராமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன ராமராஜிக்கு திருமணமாகி நீலாவதி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய கிளிஜோதிடர் முருகன், அவரது மனைவி தேவி, உறவினர் முருகேசன் ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கிளி ஜோதிடரே சக ஜோதிடரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.