புதுக்கோட்டையில் 2 இடங்களில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டையில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி 2 இடங்களில் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் காந்திநகர் உள்ளது. இந்த பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காந்திநகர் பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் நேற்று காந்திநகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ஒரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப்போல மற்றொரு பிரிவை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அந்த வழியாக வந்த நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் மறியல் நடைபெற்ற 2 இடங்களுக்கும் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.