2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 15 July 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்காக மண் தோண்டிய போது 2 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

கரூர்,

கரூரில் மாவடியான் கோவில் தெருவில் நகராட்சி கூட்டுக்குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக மண் தோண்டும் பணி நடந்து வருகிறது. 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணியின் போது மண்ணில் முதுமக்கள் தாழி ஒரு இடத்தில் புதைத்து இருந்ததை தொழிலாளர்கள் கண்டனர்.

இதுகுறித்து கரூர் அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறை சேரர் அகழ்வைப்பகத்தின் காப்பாட்சியாளர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து நந்தகுமார், மண்டல துணை தாசில்தார் மகுடிஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ரவீந்திரன் ஆகியோர் நேற்று அந்த பள்ளத்தில் முதுமக்கள் தாழியை பார்வையிட்டனர். மேலும் சிதறல்களை தொல்லியல் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் மண்ணில் புதைந்துள்ள முதுமக்கள் தாழியை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்த முதுமக்கள் தாழி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சேரர் அகழ்வைப்பகத்தின் காப்பாட்சியாளர் நந்தகுமார் தெரிவித்தார். முதுமக்கள் தாழியில் குறிப்பிடும்படி பொருட்கள் எதுவும் இல்லை என அவர் கூறினார். முதுமக்கள் தாழி இருந்ததை அந்த பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Next Story