ஆத்தூர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி பெண் நீதிபதி பரிதாப சாவு
ஆத்தூர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் நீதிபதி மரணம் அடைந்தார்.
ஆத்தூர்,
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் நீதிபதி நாகலட்சுமிதேவி(வயது46). இவரது கணவர் குமாரராஜா. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி கோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். நாகலட்சுமி தேவி கடந்த 3 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்–கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். ஆத்தூரில் உள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்பில் அவர் வசித்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பழைய வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல ஆஜராவதற்காக கணவர் குமாரராஜாவுடன் நாகலட்சுமிதேவி நேற்று காலை காரில் புறப்பட்டு சென்றார். நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜராகி விட்டு நேற்று மாலை இருவரும் காரில் ஆத்தூர் நோக்கி வந்தனர்.
ஆத்தூர் அருகே மல்லியக்கரையை அடுத்த கோபாலபுரம்–மூலக்கொட்டாய் இடையே உள்ள ஓடையின் தரைப்பாலத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது. காரை கணவர் குமாரராஜா ஒட்டிச்செல்ல, அருகில் உள்ள இருக்கையில் நீதிபதி நாகலட்சுமிதேவி அமர்ந்திருந்தார். அந்த வேளையில் எதிரே அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக காரை, குமாரராஜா வலதுபுறமாக திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி, எந்த திசையில் இருந்து வந்ததோ அதே திசையில் நோக்கி கார் திரும்பி நின்றது.
அந்த வேளையில் இடதுபுற கதவு திறந்து கொண்டது. அங்கு காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி நாகலட்சுமிதேவி தரைப்பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் குமாரராஜா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர்கள் கேசவன்(ஆத்தூர்), தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் நீதிபதி நாகலட்சுமிதேவி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நீதிபதி இறந்த தகவல் அறிந்து ஆத்தூர் கோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் வக்கீல்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு விபத்து எப்படி நேர்ந்தது? என குமாரராஜாவிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
விபத்தில் உயிரிழந்த நீதிபதி நாகலட்சுமிதேவிக்கு ராஜராஜேஸ்வரி(15), ராஜலட்சுமி(11) என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரான அரூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். ராஜராஜேஸ்வரி 11–ம் வகுப்பும், ராஜலட்சுமி 7–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.விபத்தில் பெண் நீதிபதி உயிரிழந்த சம்பவம் ஆத்தூர் கோர்ட்டு ஊழியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.