10 மாதமாக சாலை முடக்கம் மாநகராட்சி அலட்சியத்தை கண்டித்து 17–ந் தேதி கடையடைப்பு போராட்டம்


10 மாதமாக சாலை முடக்கம் மாநகராட்சி அலட்சியத்தை கண்டித்து 17–ந் தேதி கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 4:15 AM IST (Updated: 15 July 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அம்மாபேட்டையில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழியால் 10 மாதமாக பிரதான சாலை முடக்கப்பட்டது. மாநகராட்சி அலட்சியத்தை கண்டித்து 17–ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.149 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்தது. இவற்றில் 3 சிப்பங்கள் கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிக்கும் பணியாகவும், 4 சிப்பங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியாகவும் மேற்கொள்ளப்பட்டன.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் பணியை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் அது ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் புதிதாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் தற்போது 80 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் குறிப்பிட்ட பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டும், சில பகுதிகளில் பஸ் மற்றும் கனரக வாகன போக்குவரத்து அறவே துண்டிக்கப்பட்டும் பயன்பாடின்றி உள்ளது.

சேலம் அம்மாபேட்டை பிரதான சாலையில் பட்டைகோவிலில் இருந்து அம்மாபேட்டை போலீஸ் நிலையம் வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையில் இடை இடையே பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. குறிப்பிட்ட இடத்தில் குழாய் பதிக்கப்பட்டு மண் போட்டு மூடப்பட்டாலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாது.

இன்னும் 500 மீட்டருக்கு மேல் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நடக்காமல் அலட்சியமாக அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சந்து தெருக்களில் சென்று வருகின்றன. கடந்த 10 மாதமாக பிரதான சாலையே முடக்கப்பட்டதால் கனரக வாகனம் மற்றும் பஸ் போக்குவரத்தும் அறவே நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாபேட்டை மெயின் ரோட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:–

அம்மாபேட்டை மெயின் ரோடு மட்டுமல்லாது இடையில் உள்ள 30 தெருக்களிலும் கனரக வாகனங்கள் அறவே செல்ல முடியாத வகையில் சாலை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் சில இடங்களில் மட்டும் சாலை ஓரமாக மெதுவாக சென்று வருகிறார்கள்.

இந்த சாலையில் அரசு பஸ்களை தவிர, பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வேலைநாட்களில் 50–க்கும் மேற்பட்டவை சென்று வரும். மாணவ–மாணவிகள் எளிதாக பஸ்சில் ஏறி சென்று வந்தனர். தோண்டப்பட்ட குழியால் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீருடன் மண் கலந்து கலங்கலாக தண்ணீர் வருகிறது. இந்த பகுதியில் 500–க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரமே இல்லை. கடை வாடகைக்கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம். சில இடங்களில் தோண்டப்பட்ட சாலை மூடப்பட்டாலும் குண்டும், குழியுமான இடத்தில் புழுதி பறந்தவாறே உள்ளது. இதனால், காலையில் மட்டும் கடையை திறந்து விட்டு பகலில் அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், பணியை துரிதப்படுத்த வலியுறுத்தியும் பொதுமக்களுடன் இணைந்து நாளை மறுநாள்(திங்கட்கிழமை) 17–ந் தேதி அம்மாபேட்டை பிரதான சாலையில் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டம் நடத்த உள்ளோம். அன்றைய தினம் காலை 10 மணிக்கு அம்மாபேட்டை காளியம்மன் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story