விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியை 24 மணிநேரத்தில் அரசு வழங்க வேண்டும்


விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியை 24 மணிநேரத்தில் அரசு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 15 July 2017 3:40 AM IST (Updated: 15 July 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கான இடைக்கால நிதி உதவி ரூ.10 ஆயிரத்தை உடனடியாக வழங்குமாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சிவசேனா கடிதம் எழுதியது.

மும்பை,

விவசாயிகள் விதைகள் மற்றும் உரங்களை வாங்க ரூ.10 ஆயிரம் இடைக்கால நிதி உதவி வழங்கப்படும் என்று மாநில அரசு கடந்த மாதம் 13–ந் தேதி அறிவித்தது. இத்திட்டத்தின் கால வரையறை இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இதற்கான கால வரையறையை ஆகஸ்டு 31–ந் தேதி வரை நீட்டித்து மாநில அரசு நேற்று அறிவிக்கை வெளியிட்டது.

எனினும், இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நிதி உதவி சென்றடையவில்லை என்று குற்றச்சாட்டு நிலவுகிறது. இது தொடர்பாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு சிவசேனா மந்திரிகள் திவாகர் ராவ்தே மற்றும் ராம்தாஸ் கதம் ஆகியோர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர்.

அதில், ‘‘இத்திட்டத்தின்கீழ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு இன்னமும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆகையால், இந்த நிதியை உடனடியாக வழங்கி, அவற்றை விவசாயிகளுக்கு 24 மணிநேரத்தில் கொடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல், துலே மற்றும் ஜல்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். விதை மற்றும் உரங்கள் வாங்க அரசு உறுதியளித்த நிதி உதவி இன்னமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் தன்னிடம் முறையிட்டதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


Next Story