இந்தியாவில் ஆண்டுதோறும் காசநோய் பாதிப்பால் 3½ லட்சம் பேர் இறக்கின்றனர்


இந்தியாவில் ஆண்டுதோறும் காசநோய் பாதிப்பால் 3½ லட்சம் பேர் இறக்கின்றனர்
x
தினத்தந்தி 15 July 2017 4:13 AM IST (Updated: 15 July 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஆண்டுதோறும் காசநோய் பாதிப்பால் 3½ லட்சம் பேர் இறக்கிறார்கள் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் தொடக்க விழா நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்து முகாம் பணியாளர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யும் பெட்டகத்தை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:–

இந்தியாவை 2025–ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஆண்டுதோறும் 28 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு அதில் 3½ லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள். தமிழகத்தில் காசநோயால் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி குமரி மாவட்டத்தில் காசநோய் மையம் சார்பில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. குமரி மாவட்ட காசநோய் மையம் காசநோய்க்காக சளி பரிசோதனை செய்வதில் மாநில அளவில் 2–வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் ஒரு ஆண்டில் சுமார் 28 ஆயிரம் நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 1,500 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

தீவிர காசநோய் கண்டறியும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு காசநோய் இருப்பது உறுதியானால் தீவிர சிகிச்சை அளிக்கவும், ஆலோசனை வழங்கிடவும் டாக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. முகாமில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் வீடு வீடாக சென்று காசநோய் பரிசோதனை செய்வார்கள். குமரி மாவட்டத்தில் 5 ஆயிரம் நபர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் வசந்தி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரவீந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன், காசநோய் பிரிவு துணை இயக்குனர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பஸ் நிலையங்களில் உள்ள கழிவறை மற்றும் சுற்றுப்புற பகுதியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Next Story