பிரதமரை விமர்சித்து அதிகார தோரணையில் சித்தராமையா பேசுகிறார்
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து முதல்–மந்திரி சித்தராமையா அதிகார தோரணையில் பேசுவதாக எடியூரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்தும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு முதல்–மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் சவால் விட்டு பேசி இருந்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். அவர் 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை நாட்டு மக்கள் பாராட்டி வருவதுடன், அதனை கொண்டாடி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தனது ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகள் பற்றி பேசுகிறார். பிரதமர் செய்த சாதனைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று கண்மூடித்தனமாக சித்தராமையா விமர்சித்து இருக்கிறார். எந்த ஒரு மாநில முதல்–மந்திரியும் பிரதமர் நரேந்திர மோடியை இப்படி விமர்சித்ததில்லை.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதாலும், முதல்–மந்திரி பதவியில் இருக்கும் தோரணையிலும் பிரதமரின் சாதனைகள் குறித்து சித்தராமையா விமர்சித்து பேசுகிறார். மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறை, வேலையில்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளில் சித்தராமையா கவனம் செலுத்தாமல், 4 ஆண்டுகள் சாதனைகள் செய்துவிட்டதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது. முதல்–மந்திரி பதவியில் இன்னும் 9 மாதங்கள் மட்டுமே சித்தராமையாவால் இருக்க முடியும். அதன்பிறகு, காங்கிரஸ் ஆட்சிக்கு வர சாத்தியமில்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.