காமராஜர் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டி


காமராஜர் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 16 July 2017 4:00 AM IST (Updated: 16 July 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்தநாளையொட்டி தேனியில் மினி மாரத்தான் போட்டி, அலங்கார வாகன பேரணி நடந்தது.

தேனி,

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 115-வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி நாளாகவும், பல்வேறு இடங்களில் கல்வித் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. இதேபோல் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் காமராஜர் சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து போட்டி தொடங்கியது.

பாரஸ்ட்ரோடு, பங்களாமேடு, நேருசிலை சிக்னல், பெரியகுளம் சாலை, பழைய அரசு மருத்துவமனை சாலை, சமதர்மபுரம் வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதேபோல், இந்த பள்ளி வளாகத்தில் இருந்து காமராஜர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்ட வாகன பேரணி தொடங்கியது.
என்.ஆர்.டி. நகர், பெரிய குளம் சாலை, நேரு சிலை சிக்னல், மதுரை சாலை, பங்களாமேடு வழியாக மீண்டும் பள்ளியில் பேரணி நிறைவடைந்தது.

பின்னர், பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன், பொதுச்செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் ஜவஹர் மற்றும் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி செயலாளர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கில் மினி மாரத்தான் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல், தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பள்ளி முதல்வர் ஜாய்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கம்பம் ஏ.எம். சர்ச் திடல் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் போஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதேபோல் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜா இப்ராஹிம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் முருகானந்தம், மாநில துணை தலைவர் பொன் காட்சி கண்ணன், மாவட்ட செயலாளர் ருக்மான், நகர செயலாளர் இளமாறன் மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story