சின்னமனூர் அருகே உடையன்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய விவசாயிகள்


சின்னமனூர் அருகே உடையன்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய விவசாயிகள்
x
தினத்தந்தி 16 July 2017 3:45 AM IST (Updated: 16 July 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே உள்ள உடையன்குளத்தில் ஆக்கிரமிப்பை விவசாயிகள் அகற்றினர்.

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே உடையன்குளம், செங்குளம் ஆகிய இரட்டைக்குளங்கள் உள்ளன. முல்லைப்பெரியாற்றில் இருந்து வருகிற தண்ணீர் இந்த குளங்களில் தேக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சின்னமனூர் மற்றும் சீலையம்பட்டியின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளங்கள் உள்ளன. மேலும் அவைகள் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில், உடையன் குளம் 78 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆனால் தற்போது 28 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் உடையன்குளத்தில் வண்டல்மண் அதிக அளவில் படிந்துள்ளது. இதனால் தண்ணீர் தேக்கப்படும் அளவு குறைய தொடங்கியது. இதனையடுத்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே விவசாயிகளே நேரடியாக குளங்களை தூர்வார அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக பொக்லைன் எந்திரம் மூலம் உடையன்குளத்தில் தூர்வாரும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி குளத்தில் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டது. இந்த பணியில் விவசாயிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் வண்டல் மண் அள்ளப்பட்டு 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு கொண்டு சென்றனர்.



Next Story