அரசு மருத்துவமனையை ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகை


அரசு மருத்துவமனையை  ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 16 July 2017 4:00 AM IST (Updated: 16 July 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

கூடுதலாக டாக்டர்களை நியமிக்க கோரி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு மருத்துவமனை உள்ளது. திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளிலும், 92 குக்கிராம மக்களும் இந்த அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் 18 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் 5-க்கும் குறைவான டாக்டர்களே உள்ளனர். இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர தி.மு.க. சார்பில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் கார்த்தி, வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆடலரசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். முற்றுகை போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story