ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சு அவிழும் வரை தர்ம யுத்தம் தொடரும் திருவாரூரில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சு அவிழும் வரை தர்ம யுத்தம் தொடரும் திருவாரூரில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 16 July 2017 5:15 AM IST (Updated: 16 July 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சு அவிழும் வரை தர்ம யுத்தம் தொடரும் என்று திருவாரூரில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் திருவாரூர் தெற்குவீதியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாராயணசாமி தலைமை தாங்கினார். நிர்வாகி கோவி.சந்துரு வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முனுசாமி, நத்தம்விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., அமைப்பு செயலாளர் செம்மலை, மா.பா.கே.பாண்டியராஜன் எம்.எல்.ஏ., சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி பொருளாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தர்ம யுத்தம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து நாம் நடத்தும் செயல்வீரர்கள் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாநில மாநாடாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா 45 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார்கள். வளர்த்தார்கள். இன்றைக்கு இந்த இயக்கம் 1½ கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக, யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக உள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ஜெயலலிதா 27 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். தமிழகத்தை 27 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க. 2011-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா செயல்படுத்திய நல திட்டங்களை, மக்கள் ஏற்றுக்கொண்டு, இனி எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதா முதல்-அமைச்சர் என்பதை முடிவு செய்து 2016-ல் மீண்டும் ஆட்சி பொறுப்பை அளித்தார்கள்.

ஜெயலலிதா 74 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அவருடைய மரணத்தில் இருக்கக்கூடிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். அதற்கான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க. ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதற்கு தான் சசிகலா உள்ளிட்ட 16 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கி வைத்தார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின்னர் ஜெயலலிதா அவரை தனது உதவியாளராக சேர்த்தார். ஜெயலலிதா மரணம் அடையும் வரையில் சசிகலா குடும்பத்தினர் யாரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட சேர்க்கவில்லை. ஆனால் தற்போது கட்சி, ஆட்சி சசிகலாவின் குடும்பத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கி, பினாமி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற, கழகத்தை காப்பாற்ற தொடங்கப்பட்டது தான் நமது தர்மயுத்தம். இந்த கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று நிறைவடையும்போது தர்ம யுத்தம் உறுதியாக வெற்றிபெறும். அ.தி.மு.க. ஜனநாயக முறைப்படி இயங்குவதற்கான வழிபிறக்கும். கழகம் எந்த குடும்பத்துக்கும் சொந்தமில்லை. இந்த இயக்கத்திற்காக உழைத்தவர்கள், எந்த குடும்பத்தின் வாசலிலும் நிற்க கூடாது என்ற அடிப்படையில், உழைப்பின் அடிப்படையில், தியாகத்தின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படும் நிலை அ.தி.மு.க.வில் உருவாக்கப்படும்.

சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் (ஸ்டாலினும்) கைகோர்த்து கொண்டு ஒரு புதுமையான கூட்டணியை தமிழகத்தில் அமைத்துள்ளனர். சட்டசபைக்கு வெளியே புலியாக பேசினாலும், சட்டசபையில் எலியாகத்தான் ஸ்டாலின் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் ஒருவரையொருவர் ஏமாற்றுகின்ற நிலையில் இருந்து கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது ரொம்ப நாளைக்கு எடுபடாது. எல்லா மட்டத்திலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். ஆளும் கட்சியினர் சந்தோஷமாக இருக்கிறார்களோ, இல்லையோ, எதிர்க்கட்சியினர் சந்தோஷமாக உள்ளனர்.

ஜெயலலிதா தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் இந்த இயக்கத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த பாடுபட்டார். இந்த இயக்கத்தை போல இந்தியாவில் எந்த இயக்கமும் இல்லை என்ற நிலையை உருவாக்கி தந்துள்ளார். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் ஆட்சியாக இல்லை. அவர்களுக்கு கட்சியின் கட்டுக்கோப்பு பற்றி கவலை இல்லை. ஆட்சியில் இருக்க வேண்டும். அதன் மூலமாக பெறுவதை பெற்று 4½ ஆண்டுகள் கடந்து செட்டில் ஆகி விடலாம் என்ற நிலையில் உள்ளனர். 122 பேரை கொண்டு ஆட்சி நடத்தலாம். ஆனால் 7½ கோடி மக்களும் நம்முடைய பக்கம் தான் உள்ளனர் என்பதற்கு இந்த கூட்டம் சாட்சி. இந்த கூட்டத்தை நடத்துவதற்கு ஏகப்பட்ட தடை. இந்த இயக்கத்தை எங்கள் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புனித பாதையில் நாமும் இந்த இயக்கத்தை உணர்வுப்பூர்வமான இயக்கமாக ஆக்குவோம். இந்த இயக்கத்துக்கு எத்தனை துயரம், துன்பம் வந்தாலும் அதை எதிர்கொண்டு முழு வெற்றியை அடைவோம். தர்மயுத்தத்தின் வெற்றி ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை தொடரும். கழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி விடாமல் காப்போம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய் திறக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை யாராவது சிரிக்க வைத்தால், பேச வைத்தால் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன்.

மனுநீதிசோழன் ஆண்ட மண் இது. நீதி வழங்கிய மண். நீதி வழங்குங்கள். திருவாரூர் மாவட்ட மக்களே நீதி வழங்குங்கள். நீதி வழங்குவதற்கு நீங்கள் வெகுண்டெழுந்தால் தமிழகமே வெகுண்டெழும். அதற்கு நீங்கள் இன்றைக்கே பிள்ளையார் சுழி போடுங்கள். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை தர்ம யுத்தத்திற்கு கைகொடுங்கள். குடும்பத்தின் பிடியில் சிக்காமல் இருக்க எங்களோடு சேருங்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பணியை, கடமையை ஆற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள் முகமதுரபீக், அன்புச்செல்வன், துரைராஜ், லெட்சுமணன், நகர பொறுப்பாளர்கள் துரைக்கண்ணு, பிரகாஷ், இலக்கிய அணி நிர்வாகி மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபிரபாகரன், நிர்வாகி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொறுப்பாளர் மாறன் நன்றி கூறினார்.

Next Story