மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக்சாகர் ஏரி நிரம்பியது
மும்பையில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் மோடக் சாகர் ஏரி நிரம்பியது.
மும்பை,
மும்பையில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் மோடக் சாகர் ஏரி நிரம்பியது. மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மராட்டியத்தில் தற்போது பருவமழைக்காலம் ஆகும். கடந்த மாத இறுதியில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. பின்னர் 10 நாட்களுக்கு மேலாக வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில், சென்ற வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இதன்படி மராட்டியத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்து பெய்ய தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் மும்பையில் நேற்று விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
காலையிலும் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீரின் காரணமாக போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.கனமழையால் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள். இதன் காரணமாக நேற்று பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. உதாரணத்திற்கு காட்கோபர் ரெயில் நிலையத்திற்கு வழக்கமாக மதியம் 1.28 மணிக்கு வரும் சி.எஸ்.டி. விரைவு மின்சார ரெயிலில் எப்போதும் கால் வைக்க முடியாத அளவிற்கு கடும் கூட்ட நெரிசல் இருக்கும்.
ஆனால் நேற்று அந்த மின்சார ரெயில் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது. இதேபோல ஸ்லோ மின்சார ரெயில்களும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மழையின் காரணமாக ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் 10 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக இயங்கின.
வெளுத்து வாங்கும் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆறு, கால்வாய்களில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. பெருநகரங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், அணைகள் நல்ல மழைப்பொழிவை பெற்று வருகின்றன.
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான மோடக் சாகர் ஏரி பகுதியில் நேற்று காலை 8 மணி வரையில் முடிந்த 24 மணி நேரத்தில் 123 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மோடக் சாகர் ஏரிநேற்று காலை 6.32 மணியளவில் நிரம்பியது. அந்த ஏரியில் இருந்து உபரி நீர் ஆர்ப்பரித்தபடி வெளியேறி வருகிறது. மோடக் சாகர் ஏரி நிரம்பி உள்ளது மும்பைவாசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுமும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா, மேல்வைத்தர்ணா, மத்திய வைத்தர்ணா, பட்சா, விகார், துல்சி ஆகிய ஆகிய இதர ஏரிகளின் நீர்மட்டமும் கிடு,கிடுவென உயர்ந்து வருகின்றன.
பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்யும் பட்சத்தில் அந்த ஏரிகளும் விரைவில் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பைக்கு ஒரு ஆண்டுக்கு தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்வதற்கு 7 ஏரிகளிலும் சேர்த்து 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு இருப்பது அவசியம்.
தற்போது 8 லட்சத்து 99 ஆயிரத்து 388 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 837 மில்லியன் லிட்டர் தண்ணீரே இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மும்பைக்கு 200 நாட்களுக்கு வினியோகம் செய்வதற்கு தேவையான தண்ணீர் ஏரிகளில் இருப்பு உள்ளதாக மும்பை மாநகராட்சியின் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.