கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 16 July 2017 4:07 AM IST (Updated: 16 July 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிருஷ்ணகிரி அணையில் இருந்து தற்போது உள்ள நீரின் அளவை கொண்டும், அணைக்கு வரும் நீரின் வரத்தை கொண்டும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 80 கன அடியும், வலதுபுற கால்வாய் மூலமாக வினாடிக்கு 75 கன அடியும் என மொத்தம் 155 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பென்னேஸ்வரமடம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறும்.
கிருஷ்ணகிரி அணை பாசன திட்டத்தின் கீழ் 2 பிரதான வாய்க்கால்கள் மற்றும் 26 பாசன ஏரிகள் மூலமாகவும் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 52 அடியாகும். அணையின் இன்றைய நீர்மட்டம் 48.40 அடியாகும்.

அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எந்த காரணம் கொண்டும் பாசனத்திற்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் வழங்கப்பட மாட்டாது. எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. (அம்மா அணி) மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் தென்னரசு, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கே.நாராயணன், கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story