காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 July 2017 4:41 AM IST (Updated: 16 July 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதியில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் காமராஜரின் 115–வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் செண்பகராஜன் தலைமையில் செயலாளர் மாரிமுத்து நாடார், பொருளாளர் நித்தியானந்தம் நாடார் முன்னிலையில் காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் நாடார் சங்க நிர்வாகிகள் மகாராஜன், முத்து, திராவிட மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் திருக்கனூர், கிருமாம்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், கொட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொன்வண்டு சோப்பு நிறுவனம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுச்சேரி நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் இஸ்ரவேல் நாடார், நிறுவன மேலாளர் தம்பிராஜ் ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தவளக்குப்பம் நே‌ஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உமா முன்னிலை வகித்தார். விழாவில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் பேசினார்கள். தொடர்ந்து கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்த மாணவ–மாணவிகள் 50 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் செல்லம்மாள், அனிதா, தீபா, ராஜேஸ்வரி, விமல்ராஜ், சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரியாங்குப்பம்– வீராம்பட்டினம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மணவெளி தொகுதி காங்கிரஸ் சார்பில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் நடந்த விழாவில் அரசு கொறடா அனந்தராமன் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

புதுவை உழந்தை கீரப்பாளையம் காங்கிரஸ் மற்றும் சிவாஜி பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. மாநில சிவாஜி பேரவை தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் நிர்வாகி திருவேங்கடம் முன்னிலை வகித்தார். மாநில காங்கிரஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் மணி, கணேசன் ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

காமராஜர் தேசிய காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தசாமி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு தலைமை தாங்கினார். விழாவில் காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story