புதுவைக்கு 5–வது இடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி பெருமிதம்


புதுவைக்கு 5–வது இடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 16 July 2017 4:51 AM IST (Updated: 16 July 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய அளவில் உயர் கல்வியில் புதுவை மாநிலத்திற்கு 5–வது இடம் கிடைத்துள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசு கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவர்கள் நாளாக கொண்டாடப்பட்டது. எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடிரோட்டில் உள்ள என்.டி. மகாலில் நேற்று காலை இந்த விழா நடந்தது. அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். அரசுத் துறை செயலாளர் நரேந்திரகுமார் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வி இயக்குனர் குமார் வரவேற்றுப் பேசினார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஏழை குடும்பத்தில் பிறந்த காமராஜர் 6–ம் வகுப்பு பயிலும் போது பள்ளிப் படிப்பை கைவிட்டு, பொதுவாழ்வில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ., எம்.பி., முதல்–அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். அவரது ஆட்சியில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இளைய சமூகத்தை மேம்படுத்த கல்வியில் சாதனை புரிந்தவர். வேளாண்மை புரட்சியை ஏற்படுத்தினார்.

பல தொழிற்சாலைகளை கொண்டு வந்தார். பல்வேறு அணைகளை கட்டினார். சிறிய கிராமங்களில் கூட பள்ளிகளை நிறுவி மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த பெருமை காமராஜருக்கு உள்ளது. ஊழல், முறைகேடுகள் இன்றி 9 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். 2 பிரதமர்களை உருவாக்கிய பெருமை கொண்டவர். புதுச்சேரி மாநிலத்தின் மீது காமராஜர் அதிக பற்று கொண்டவர்.

புதுவையில் நானும், அமைச்சர்களும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். ரூ.1,850 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றோம். மேலும் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை செயல்படுத்த ரூ.1,400 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சுற்றுலா வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்க உள்ளது. புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதால் புதுவையில் தொழில் தொடங்க ஏராளமான தொழிற்சாலைகள் விருப்பம் தெரிவித்துள்ளன. என்ஜினீயரிங் படித்த மாணவ–மாணவிகள் வேலைவாய்ப்பை பெறுவதற்காக புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க தொடர்ந்து ஆசிரியர்களிடம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். புதுவைக்கு தற்போது சோதனைக் காலம் வந்துள்ளது. நமது மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என விதிமுறை வந்துள்ளது. இதற்காக மாணவர்களுக்கு படிப்படியாக பயிற்சி தரப்பட்டு வருகிறது.

சிறிய மாநிலங்களில் புதுவையை முதன்மையாக திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுவை மாநிலம் 5–வது இடத்தை பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

விழாவில் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு வினாடி வினா, பிழையின்றி வாசித்தல், எழுதுதல், பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய திறனறிதல் தேர்வில் மாநில அளவில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ–மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story