காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முடியாது: மக்கள் தந்த ஜனநாயக உரிமைகளை பறிக்க பா.ஜ.க. முயற்சி
காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மக்கள் கொடுத்த ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயலில் பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். காமராஜர் உருவ படத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–
காமராஜர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பலமுறை சிறை சென்று எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றிவர். தன்னலமற்றவர், அப்பழுக்கற்றவர், ஊழலில் திளைக்காதவர், தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர்.
பதவிக்கு வந்தபின் கட்சியை உதறித்தள்ளுவது, கட்சிக்காரர்களை மதிக்காமல் இருப்பது, சொந்த செல்வாக்கில் வந்துவிட்டதாக நினைப்பதெல்லாம் தவறு. அரசியல் கட்சி இல்லாமல் பொதுவாழ்க்கையில் யாரும் ஒளிர முடியாது. காங்கிரஸ் கட்சியில் நான் இல்லை என்றால் நான் சாதாரண நாராயணசாமி.
தற்போது தமிழகத்தில் அனைத்து அமைச்சர்கள் வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடக்கிறது. இதற்கு பதவிக்கு வந்தபின் கொள்ளை அடிப்பதுதான் காரணம். புதுச்சேரியில் நானும், அமைச்சர்களும் முள்மேல் நடக்கிறோம. 18 மணிநேரம் உழைக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து திட்டங்கள் காலத்தோடு வரவில்லை. முட்டுக்கட்டைகள் உள்ளன. ஆனாலும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் 2 முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தது. தற்போது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியால் அந்த திட்டம் நமக்கு கிடைத்துள்ளது. இதனை 3 ஆண்டு காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். சோலை நகரில் இருந்து வாணரப்பட்டை வரை கடற்கரையை அழகுபடுத்த திட்டம் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.107 கோடி வாங்கியுள்ளோம். மேலும் ரூ.100 கோடி வாங்க உள்ளோம்.
கிராமப்புற மருத்துவ திட்டத்திற்கு ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்த போது ரூ.40 கோடிதான் வாங்கினார். ஆனால் நாங்கள் ரூ.80 கோடி வாங்கியுள்ளோம்.
தற்போது ஆட்சி கவிழ்ப்பு செய்யப்போவதாக கூறுகின்றனர். ஆட்சியை கவிழ்க்க முடியாது. புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க கூட்டணி பலமாக உள்ளது. நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்த நடத்திய முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரியை ஒரு உலுக்கு, உலுக்கி உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் பா.ஜ.க. எவ்வளவு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்தவர்களை கொல்லைப்புறம் வழியாக சட்டசபைக்குள் பா.ஜ.க. திணித்துள்ளது.
சட்டமன்றம் அமைப்பதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமனம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.விற்கு பதவிப்பிரமாணம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் உண்டு. சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின் அந்த அதிகாரம் சபாநாயகருக்கு போய்விடும். முதல்–அமைச்சர், அமைச்சர்களின் பரிந்துரைப்படித்தான் கவர்னர் செயல்பட முடியும். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கவர்னரும், மத்திய மந்திரிகளும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கொடுத்த ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. மக்களால் பெரும்பான்மை பெற்றவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அனைவரும் விவரம் தெரிந்தவர்கள். அதனால் தான் முழுஅடைப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை கொடுத்தனர். அதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.