ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி விற்பனை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி விற்பனையானது.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி 2 நாட்கள் பருத்தி ஏலம் நடைபெறும். வழங்கம்போல் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சேலம், கொங்கணாபுரம், மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். மொத்தம் 6,413 மூட்டை பருத்தி விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்தது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் குமரேசன் முன்னிலையில் இந்த மறைமுக ஏலம் நடந்தது.
பி.டி.காட்டன் ரகம் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்த பட்சவிலையாக ரூ.4,896–க்கும், அதிக பட்சமாக ரூ.5,297–க்கும் ஏலம் போனது.
சராசரியாக ஒரு குவிண்டால் ரூ.5,096–க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரத்து 711–க்கு பருத்தி விற்பனையானது.சேலம், ஊத்தங்கரை, கொங்கணாபுரம், அவினாசி, புளியம்பட்டி, பெருந்துறை, தேனி, பொள்ளாச்சி, காரமடை பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தி மூட்டைகளை வாங்கிச்சென்றார்கள்.