சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா விசாவில் செல்ல வந்த பயணிகளை சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த அப்துல்(வயது 40) என்பவர் வைத்து இருந்த சூட்கேஸ் மற்றும் பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், துணிகளுக்கு இடையே அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அப்துலின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு சென்று கொடுத்தால் விமான டிக்கெட் மற்றும் செலவுகள் போக ரூ.10 ஆயிரம் தருவார்கள் என்பதால் கடத்திச் செல்ல முயன்றதாக அதிகாரிகளிடம் அப்துல் தெரிவித்தார். அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.