செய்தி தரும் சேதி 24. கடிதங்கள் அலுப்பதில்லை
கடிதம் வெறும் தகவல் மட்டும் அல்ல. அது அஞ்சலில் வருகிற இதயம். எழுத்துகளுக்கு முளைக்கிற சிறகு. மனிதன் அடையும் நட்பு அடர்த்தியின் அடையாளம்.

அதிகக் கடிதங்கள் பெறுகிறவர்கள் அதிக செல்வாக்குடன் இருப்பவர்கள். சின்ன வயதில் ‘நம் பெயருக்கு கடிதம் வராதா’ என்று காத்திருந்த அனுபவம் சென்ற தலைமுறைக்கு உண்டு. இப்போது அதே நபர்கள் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு ‘இன்று எந்தக் கடிதமும் வரக்கூடாது’ என்று வேண்டுகிற மாற்றமும் உண்டு.
வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கே கடிதம் வரும். ‘என் பெயருக்கு ஏதாவது கடிதாசி இருக்கிறதா?’ என தபால்காரரிடம் ஒவ்வொரு முறையும் கேட்டு ஏமாறுவது உண்டு.
எங்கள் பகுதிக்கு அங்கன்னாசாரி என்கிற அன்பு மனிதர் அஞ்சலெடுத்து வருவார். அத்தனை வீடுகளும் அவருக்கு அத்துபடி. ‘தபால் இல்லை’ என்று சொல்லாமல், ‘நாளை தருகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார். ஒரு மனிதர் பணியை எவ்வளவு நேசிக்க முடியும் என்பதற்கு அவரே அப்போது எங்களுக்கு எடுத்துக்காட்டு.
எங்களுக்கும் எப்போதாவது அஞ்சல் வரும். அந்தக் காலத்தில் கணினி இல்லை, இணையம் இல்லை, அலைபேசி இல்லை. அஞ்சல் மட்டுமே எஞ்சியிருந்தது. அனைத்தையும் அதுவே விஞ்சியிருந்தது.
தேர்வு முடிவுகள் அப்போது தபாலில் வரும். அட்டையில் வருகிற முடிவை படிக்காமல் தருகிற பக்குவம் கொண்டவர் அங்கன்னாசாரி.
தேர்ச்சியானது தெரிந்ததும் கடிதத்தைக் கொடுத்த அவரின் கைகளையே பிடித்து அழுத்திக் குலுக்கி மகிழ்வோம் நாங்கள். ‘இனிப்பு எப்போது?’ என்று புன்னகையுடன் கேட்பார். ‘நாளை தருகிறோம்’ என்று சிலிர்த்தவாறே சொல்வோம். அடுத்த நாள் அவரும் கேட்டதில்லை, நாங்களும் தந்ததில்லை.
அஞ்சல் தருபவருக்கும் நமக்குமான உறவு அலாதியானது. அவர் கடிதம் எழுதுபவர்களைவிட நமக்கு நெருக்கமானவராகத் தோன்றும். நம்மில் எத்தனை பேருக்கு தபால் கொடுப்பவரின் பெயர் தெரியும். முகவரி தெரியாத அவர்கள்தான் நம் முகவரியை முக்கியப்படுத்துகிறார்கள்.
படித்து முடித்து பணிக்காகக் காத்திருந்தபோது வீடுவரை தபால் வருவதை எதிர்பார்க்கும் பொறுமை இல்லை. காலையில் எட்டு மணிக்கே தலைமை அஞ்சலகம் சென்று அவர் வெளியே வந்ததும் அவரைச் சுற்றிக்கொள்வோம்.
எங்களைப் போன்ற வேலைக்காகக் காத்திருக்கும் இளசுகளும், வேலை முடித்து ஓய்வூதியத்திற்கான காசோலைக்காக காத்திருக்கும் பெரிசுகளும் அங்கே வல்லூறுபோல வட்டமிடுவோம்.
அவர்கள் அந்த அரைமணி நேரத்தில் அலசுகிற உலகச் செய்திகள் என் செவிகளிலும் விழும், தெப்பக்காட்டில் யானைகளுக்குத் தருகிற தீவன உருண்டை சிந்தும்போது காட்டுப் பன்றிகளுக்கும் கொஞ்சம் கிடைப்பதைப்போல. அந்த உரையாடலில் என்னை செதுக்கிக்கொண்ட தருணங்கள் பல.
பணிக்குச் சென்ற பிறகு தனிமனிதனாய் ஆன சுதந்திரம். பணியே ஒரு மனிதனின் ஆளுமையை அர்த்தப்படுத்துகிறது. அதுவரை அவன் மிச்சசொச்சம், பெற்றோர்களின் எச்சம். அதன் பின்பு அவன் மற்றோரால் மதிக்கப்படுபவன். அவனுக்கென்று முகவரி உருவாகிறது. அவனுக்கென்று இடைவெளி உருவாகிறது. அவன் தனியுரிமை மதிக்கப்படுகிறது. அப்போது பிரிக்கப்படாத அவன் பெயரிட்ட தபால்கள் கைகளுக்கு வந்து சேருகிறது.
கல்லூரியில் பழகிய நல்ல நண்பர்கள் விடுதி வாழ்க்கை முடிந்து வீட்டுக்கு வந்ததும் எழுதுகிற கடிதங்கள் தித்திக்கத் தொடங்குகின்றன. பிரிக்கிறபோதே இதயத் துடிப்பு எகிறுகிறது. ‘உன் நினைவு அடிக்கடி வருகிறது. நாம் இருவரும் ஆர்.எஸ்.புரத்திற்குச் சென்ற மாலை நினைவுகளை மறக்க முடியுமா?’ என்று எழுதிய வரிகளைப் படித்ததும் அக்கடிதத்தில் நண்பன் புள்ளி வைக்கத் தவறிய மெய்யெழுத்துகளுக்கு நம் கண்ணீரே பொட்டிடுகிறது.
வேலை கிடைக்கும்வரை நண்பர்களின் கடிதங்களே ஆறுதல்கள். அவர்கள் நம்மை ஆசுவாசப்படுத்தும் வரிகளை புது நகைகளை அணிந்த பெண் அடிக்கடித் தொட்டுப்பார்த்துக்கொள்வதைப்போல தடவிப் பார்த்து மகிழும் அனுபவங்கள் உண்டு. நெஞ்சத்திலிருந்து நெகிழ்ச்சியுடன் நீண்ட கடிதங்களை பத்து முறை படித்து பத்திரப்படுத்துவதுண்டு.
நட்பின் நீட்சியாய் சிலருக்கு காதல் மலர்வது உண்டு. காதலையும் நட்பென்றே குறுந்தொகை குறித்துவைத்திருக்கிறது. ‘குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்று தேவகுலத்தார் காதலை கையகப்படுத்துகிறார்.
நேசம் கொண்டவர்கள் மடல் எழுதும்போது அந்த நாளே மஞ்சள் பூசிக்கொள்கிறது. கடிதம் கிடைத்ததும் புதையல் கிடைத்த பூரிப்பு ஏற்படுகிறது. தாறுமாறாகப் பிரித்து கடிதமே சிதையுமளவு பதற்றம் தோன்றும். படிக்கப்படிக்கப் பரவசம் படரும். உலகம் இருப்பதே மறந்துபோய் உணர்ச்சிகள் முகத்தில் முகாமிடும்.
நம்மைத் தவிர அனைவருக்கும் நாம் எதைப் படிக்கிறோம் என்பது தெரிந்து போகும். பணத்தைவிட அந்தக் கடிதம் அதிக நாட்கள் பத்திரப்படுத்தப்படும். அதை எத்தனை முறை வாசித்தார்கள் என்பதற்கு யாராலும் கணக்கு வைக்க முடியாது. அதிலிருக்கும் காற்புள்ளிக்கும் அர்த்தங்கள் கற்பிக்கப்படும்.
கடிதங்கள் பல வகை. வாழ்த்துக் கடிதம் வழக்கமான ஒன்று. நலம் விசாரிப்பு எப்போதும் ‘அனைவரும் நலமே’ என்று தொடங்கி வீட்டில் உள்ளவர்கள் அனைவருடைய உபாதைகளையும் விலாவாரியாக விவரிக்கும். பணத்திற்காக மட்டும் தந்தைக்கு மகன் எழுதும் கடிதம் கல்லூரி வாழ்க்கையில் மட்டும் முளைக்கும். பாராட்டுக் கடிதம் எப்போதாவது வரும்.
நான்கு மூலைகளில் மஞ்சள் தடவிய மங்கள நிகழ்வுகள் கொண்ட அட்டையும், கறுப்பு மையிட்ட ஈமச்சடங்கு அட்டையும் உள்ளே இருப்பதை அறிமுகப்படுத்தியவாறு வந்து சேரும். கறுப்பு மூலைகள் கொண்ட கடிதம் படித்த உடனே கிழிக்கப்படும். மரணம் தாங்கிய கடிதங்களுக்குக் கூட பயப்படும் மனிதர்கள்.
‘பணி கிடைத்தது’ என்று வருகிற கடிதங் களுக்காகவே அன்று பல இளைஞர்கள் காத்திருந்தார்கள். இப்படி எதிர்பார்ப்புகளைப் பொருத்து ஏக்கங்களும் காத்திருப்புகளுமாக கன்னத்தில் கைவைக்கச் செய்தன.
இன்று கடிதம் எழுதுபவர்கள் குறைவு. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களே கடிதத்தின் கை பிடித்து உறவுப் பாதையில் ஊர்ந்து செல்கிறார்கள். இளைஞர்கள் கடிதம் வரும்வரை பொறுமை காட்டுவதில்லை. அவர்கள் மின்னணு ஊடகங்களில் பறக்கிறார்கள். உடனே குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். மின்னஞ்சல் தட்டிவிடுகிறார்கள். எண்ணத்திலிருப்பதை உடனடியாக இறக்கிவைத்துவிடுகிறார்கள்.
குறுஞ்செய்தியில் முகிழ்க்கிற காதல் குறுந்தொகைபோல நீடிக்க முடியுமா! குறுகிய காலத்திலேயே கருகிப்போய்விடுகிறது.
கடிதம் எழுதும்போது யோசித்து எழுத வேண்டும். அதில் மொழிநடை முக்கியம். விளங்கச் சொல்லி அருகில் இருப்பதைப்போன்ற உணர்வை எழுதுபவர்கள் கையாளுவார்கள். அனைவரைப்பற்றிய அக்கறையான விசாரிப்பும் அதில் இருக்கும்.
இடைவெளி அதிகமாக இருப்பதால் மனம் வடிகட்டியவற்றையே கைகள் எழுதத் தொடங்கும். சில கடிதங்களை கோபமாக எழுதி சில மணி நேரம் கழித்து வாசித்துப் பார்த்து கிழித்துப்போட்ட அனுபவம் பலருக்கு உண்டு.
சொன்ன சொல்லையும், எறிந்த கல்லையும், இழந்த காலத்தையும் திரும்பப் பெற முடியாது என்பது சொலவடை. அதில் ‘அனுப்பிய குறுஞ்செய்தியையும்’ என்கிற பதத்தை இணைத்துக்கொள்ளலாம்.
கைகள் எழுதுவதற்கும், கணினி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. ரத்தம் விரல்களின் வழியாக எழுத்துக்களில் கலப்பதைப்போன்ற உணர்வு கடிதம் எழுதும்போது உண்டாகும். வாங்கிய உள்நாட்டுக் கடிதத்தில் ஒரு பகுதியையும் வீணாக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் விரிவாக எழுதும் மனநிலையுடன் கடிதத்தை எழுதத் தொடங்குகிறோம். மின்னஞ்சலிலோ எப்போது முடிப்போம் என்கிற அவசரத்தில் தட்டச்சு செய்யத் தொடங்குகிறோம்.
கடிதம் எழுதும்போது சொற்களில் உள்ள எழுத்துகள் குழம்பினால் அகராதி நமக்கு அகப்படுகிறது. அதன் மூலம் பல புதிய சொற்கள் புலப்படுகின்றன. இப்போது சொற்களை கணினியே சூசகமாக சொல்லித் தருகிறது. இதனால் பலருக்கு பல ஆங்கிலச் சொற்களின் எழுத்துகள் சரிவரத் தெரிவதில்லை. பலர் சொற்களை குறுக்கி எழுதி மூலச் சொற்களையே மறந்துவிடுகிறார்கள்.
கைகளில் தவழும் திடப்பொருளான கடிதத்தை தடவிப் பார்க்கும்போது ஏற்படும் ஆனந்தம் மின்னஞ்சலை வாசிக்கும்போது நிகழ்வதில்லை. அவை குறைப்பிரசவங்களாகவும், அவசர வளர்ப்புகளாகவும், அகால வாசிப்புகளாகவும் அமைந்துவிடுகின்றன. யாரும் மின்னஞ்சலை திரும்பத்திரும்ப வாசித்து மகிழ்வதாகத் தெரிவதில்லை. அடுத்துப் பார்க்க வேண்டிய அஞ்சலுக்கு கண்கள் தாமாகத் தாவிவிடுகின்றன.
சில கடிதங்களை நேசிப்பவர்களுக்கு அனுப்பும்போது அவற்றில் வாசனைத் திரவங்களை தெளித்து அனுப்புவது வழக்கம். இந்திய அஞ்சல் துறை ஏப்ரல் 23 அன்று பெங்களூரு பொது தபால் அலுவலகத்தில் ‘காப்பி அஞ்சல்தலை’ என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதிலிருக்கும் காப்பி வாசனை அதிக நேரம் நீடித்திருக்கும். அது அஞ்சல்தலையை சேமிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிற ஒன்று என்பதால் 100 ரூபாய் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் நெஞ்சைப் பிழியும் நெகிழ்ச்சி கொண்டவை. ‘அன்புள்ள கமலாவிற்கு’ என்கிற தலைப்பில் புத்தகமாக்கப்பட்டிருக்கிறது. பாசாங்கில்லாத கடிதங்களே பத்திரப்படுத்தப்படும். கடிதங்களை மீண்டும் எழுதத் தொடங்குவோம். அது நாம் பல நெருக்கடிகளில் மீண்டு வர உதவும்.
(செய்திகள் தொடரும்)

Related Tags :
Next Story