கோடநாடு சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்


கோடநாடு சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 July 2017 4:30 AM IST (Updated: 16 July 2017 10:40 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு எஸ்டேட்டில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் ராஜன் மறைவையொட்டி அவரது உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பத்ரி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, ராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கினார்.

இதில் மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன், நிர்வாகிகள் கிரி, சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன்பிறகு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த 1–ந் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது. இந்த வரியால் சாதாரண ஏழை, எளிய மக்களும், சிறு,குறு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்த தொழில்கள் எழுவதற்கு மீண்டும் முயற்சித்த போது, இந்த வரியினால் மீண்டும் தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக கோவை, திருப்பூர், கரூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டாசு, தீப்பட்டி, ஜவுளி, பனியன் ஆகிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது தேயிலை தொழிலும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

தேயிலை உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தியதால், விவசாயிகளுக்கு பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு கூலி தொழிலாளர்களையும் விட்டு வைக்க வில்லை. மத்திய– மாநில அரசு நடவடிக்கை எடுத்து சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும். பலமுனை வரியை விட ஒருமுனை வரி மக்களுக்கு பலன் தரும் என்று கூறினார்கள். ஆனால் இதில் எதிர்மாறான விளைவை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த வரியை குறைக்க முன்வர வேண்டும்.

சேலம் உருக்காலை வளாகம் அதிக மதிப்பு கொண்டதாகும், இதனை தனியாருக்கு விற்க முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதே போன்று பாதுகாப்பு துறைகளையும் விட்டு வைக்காமல் தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலை ஏற்கனவே லாபகரமாக இல்லை என்று கூறினார்கள். இந்த தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இங்கு பணியாற்றும் 168 தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்காமல் இழுத்தடிப்பது அவர்களது வாழ்க்கை தரத்தை பாதிப்படைய செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விருப்ப ஓய்வின் மூலம் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரிக்கை விடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கோடநாடு எஸ்டேட்டில் நடைபெறும் சம்பவங்கள் மர்மமாக உள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டாம். ஏனெனில் சி.பி.ஐ. மத்திய அரசின் கருவியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு கோடநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்.


Next Story