மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஜெ.தீபாவின் கணவர் மாதவன் கூறினார்.
திருவாலங்காடு,
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் நேற்று கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்தித்து பேசி, கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் டெல்டா பகுதி வறண்டு காணப்படுகிறது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, காவிரி ஆற்றில் தண்ணீர் கிடைப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதியை பெற்று தந்தார். கதிராமங்கலம் மக்கள் மீது காட்டும் அடக்கு முறையை, கர்நாடக மாநிலத்தின் மீது காட்டி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் சந்தோஷமாக இருக்கும். கர்நாடகா மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 போகம் விளைந்த டெல்டாவில் இன்று விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஓ.என்.ஜி.சி. திட்டத்தை அனுமதித்தவர்கள் கதிராமங்கலம் வந்து தண்ணீர் குடிக்க வேண்டும்.
தற்போது கதிராமங்கலம் கிராம மக்கள் தங்களுடைய சொந்த ஊரில் அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறவழியில் நடைபெறும் போராட்டத்தை அரசு நிர்வாகம் தொந்தரவு செய்யக்கூடாது. அதை மீறினால் அது ஜனநாயகம் ஆகாது. இங்கே கோதுமை விளைந்தால் ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணியை மத்திய அரசு அனுமதித்து இருக்காது. அரிசியின் அருமையும், பெருமையும் மத்திய அரசுக்கு தெரியவில்லை. டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முயற்சியை முறியடிக்க அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.