கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் பங்கேற்றார்.
திருப்பூர்,
தேங்காய் உடைக்க கட்டணம், நெய் தீபம் ஏற்ற கட்டணம், அர்ச்சனை செய்ய கட்டணம் என்பது உள்பட கோவில்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்து முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் நேற்று காலை மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். மாநில அமைப்பாளர் பக்தன், செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு ஜி. வெங்கடேஸ்வரன், நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சேவுகன், மாவட்ட தலைவர் அண்ணாத்துரை, பொதுச்செயலாளர் கிருஷ்ணன், துணைத்தலைவர்கள் கதிர்வேல், பாஸ்கர், சாமுண்டி மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கைகளில் கோரிக்கைகள் அடங்கிய விளம்பர பதாகைகளையும், இந்து முன்னணி கொடியையும் வைத்திருந்தனர்.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.