கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பரமத்திவேலூர்,
இந்து முன்னணி சார்பில், கோவில்களில் தரிசன கட்டணங்களை ரத்து செய்யக்கோரி நேற்று காலை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பரமத்திவேலூர் நகர பொதுச்செயலாளர் நிர்மல்குமார் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை இந்துக்களின் கலாசாரம், பண்பாடு, ஆன்மிக வகுப்புக்கல்வி, மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும். கேரள மாநிலத்தைப்போல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இலவசமாக தரிசனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட துணைத்தலைவர் இளமுருகன், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கபிலர்மலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒலி பெருக்கி மூலம் பேச அனுமதிதராத பரமத்திவேலூர் போலீசாரை கண்டித்து திடீர் என வாயில் கருப்பு துணி கட்டியும், சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 50–க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.