ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் 3–வது நாளாக விசாரணை


ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் 3–வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 16 July 2017 11:00 PM GMT (Updated: 16 July 2017 8:26 PM GMT)

ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் 3–வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். பிரபல ரவுடி. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. பலமுறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். தற்போது ஸ்ரீதர் வெளிநாட்டில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீதரின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 9–ந் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்த ஸ்ரீதர் மகன் சந்தோஷ்குமாரிடம் (வயது 24) காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். 11–ந் தேதி விசாரணைக்காக ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு வழங்க காஞ்சீபுரத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த குற்றவியல் நீதிபதி வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கினர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சந்தோஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில், தான் லண்டனில் படித்து வருவதாகவும், அதனால் தனது பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், இந்த வழக்கில் போலீசார் தனக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கக்கூடாது என்றும் மனு செய்தார். அதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, விசாரணைக்காக நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையொட்டி சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஆஜரானார். போலீசார் அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்றும் சந்தோஷ்குமார் பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஆஜரானார். நேற்று 3–வது நாளாக நடத்தப்பட்ட விசாரணை 3 மணி நேரம் நீடித்தது. அப்போது போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. ஐகோர்ட்டு உத்தவின்படி நேற்றுடன் விசாரணை முடிந்தது. விசாரணைக்கு அழைக்கப்படும் நேரத்தில் வரவேண்டும் என்று சந்தோஷ்குமாரிடம் போலீசார் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்றைய விசாரணையில் ஸ்ரீதர் எந்த நாட்டில் உள்ளார் என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிகிறது.


Next Story