‘கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்’ சென்னையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், இந்து கோவில் சொத்துகள், வீடுகளை வேற்று மதத்தினருக்கு வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது.
சிலைத்தடுப்புப் பிரிவில் திறம்பட செயல்பட்ட போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டதற்கு கண்டனம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தவகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தொடங்கி வைத்து பேசியதாவது:–
நாட்டிலேயே தமிழகத்தில் அதிக வழிப்பாட்டு தலங்கள் இருப்பதால் தமிழகம் கோவில் மாநிலமாக திகழ்கிறது. ஆனால் இங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பது, கோவில் சொத்துக்களை விற்பது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்கிறது.
எனவே இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். கோவில்களில் நியாயமான செயல்கள் நடக்க வேண்டும் என்பதற்காக நாம் எவ்வளவோ பாடுபட்டுள்ளோம், தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறோம். ஒரு சில நிகழ்வுகளில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
சிறிய அளவில் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா தற்போது மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் இடங்களில் நடந்து வருகிறது. நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் நடத்தும் கடைசி ஆர்ப்பாட்டம் இதுதான் என்று ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்டது. காரணம் அரசு உடனே நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. தவறும் பட்சத்தில் 100 ஆண்டுகள் ஆனாலும் விடமாட்டோம். குறிப்பாக கோவில்களை மீட்கும் வரை நம்முடைய போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.