சிறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தினாலும் விதிமுறைகளை டி.ஐ.ஜி. ரூபா மீறியுள்ளார்
பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தினாலும் விதிமுறைகளை டி.ஐ.ஜி. ரூபா மீறி இருப்பதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை டி.ஐ.ஜி. ரூபா அம்பலப்படுத்தி உள்ளார். அங்கு நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகவும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் 2 அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறும் குற்றச்சாட்டுகளால், அவருக்கும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வுபெற்ற சாங்கிலியானா கூறியதாவது:–
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை டி.ஐ.ஜி. ரூபா வெளியே கொண்டு வந்துள்ளார். அவர் தனது பொறுப்பை உணர்ந்து அங்கு நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளார். இந்த முறைகேடுகளை அவர் சரியான ஆதாரங்களுடன் நிரூபித்தால் பாராட்டு கிடைக்கும். ஆனால் அவர் நிரூபிக்க தவறி விட்டால் கெட்ட பெயர் தான் ஏற்படும்.ஐ.பி.எஸ். அதிகாரியான டி.ஐ.ஜி. ரூபா உணர்ச்சி வசப்படக்கூடாது. இந்த விவகாரத்தை ஒரு ஆளாக சுயமாக கையாண்டு உள்ளார். இது பாராட்டத்தக்கது. ஆனால் இந்த விவகாரத்தில் போலீஸ் துறையின் விதிமுறைகளை அவர் மீறி இருக்கிறார். விதிமுறைகளை டி.ஐ.ஜி. ரூபா மீறி இருக்கக்கூடாது என்பது எனது கருத்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்று, போலீஸ் துறையில் ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வுபெற்ற பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:–போலீஸ் துறையில் இருந்து சிறைத்துறை தனித்து இயங்கும். சிறைத்துறையானது, சிறைத்துறை டி.ஜி.பி. தலைமையில் தான் இயங்குகிறது. சிறைத்துறைக்கும், மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஊழல் தடுப்பு படைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிய வந்தாலோ, அதுபற்றிய ஆதாரங்கள் கிடைத்தாலோ முதலில் சிறைத்துறை டி.ஜி.பி.யிடம் தான் அறிக்கை வழங்க வேண்டும்.
இந்த அறிக்கையின் மீது சிறைத்துறை டி.ஜி.பி. தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில போலீஸ் டி.ஜி.பி. அல்லது உள்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த அறிக்கையின் விவரங்களை அனுப்பலாம். ஆனால் டி.ஐ.ஜி. ரூபா தனது அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி., மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் பிறருக்கு ஒரே நேரத்தில் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவே ஒரு விதிமுறை மீறல் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதற்கு உயர் அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி உள்ளதை பலர் பாராட்டி உள்ளனர். இருப்பினும், அவர் தொலைக்காட்சி சேனல்கள் முன்பு தோன்றி பேசியதற்காகவும், குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தும் விதத்தில் விதிமீறி நடந்து கொண்டதாகவும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.