கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனிதர்களை கொல்லக்கூடிய வி‌ஷத்தன்மையுடைய ஜெல்லிமீன்கள்


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனிதர்களை கொல்லக்கூடிய வி‌ஷத்தன்மையுடைய ஜெல்லிமீன்கள்
x
தினத்தந்தி 18 July 2017 3:15 AM IST (Updated: 17 July 2017 10:28 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனிதர்களை கொல்லக்கூடிய வி‌ஷத்தன்மையுடைய ஜெல்லிமீன்கள்? பொதுமக்கள் பீதி

கொடைக்கானல்

கடலில் ஆழமான இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை ஜெல்லி மீன்கள் உயிர் வாழ்கின்றன. இவை ஆழ்கடலில் வாழும் தன்மை கொண்டவை. இதனால் அவைகளை பற்றி அறியப்படாத பல்வேறு வி‌ஷயங்களும், பல வகை இனங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அறிவியல் உலகில் பெரும் தாக்கத்தினை ஜெல்லி மீன்கள் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2004–ம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய இனமாக ‘இருகாண்ட்சி‘ என்ற ஜெல்லிமீன் வகை அறிஞர்களால் கண்டறியப்பட்டது. இது, உலகிலேயே அதிக வி‌ஷத் தன்மையுள்ள ஜெல்லி மீன் என்ற பெயரினைப் பெற்றது. உலக அறிஞர்கள், ஜெல்லி மீன்களை பற்றி தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் ஜெல்லி மீன்களை பற்றிய உண்மைகள் இன்றளவிலும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த ஜெல்லி மீன்களின் வி‌ஷம், மனிதனை கொடூரமாக தாக்கக் கூடியதாகும். சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, வாந்தி, பின் முதுகில் வலி, மார்பு வலி போன்றவற்றை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 30 வினாடிகளில் மனிதனை கொல்லும் ஆற்றல் கொண்ட ஜெல்லி மீன்களும் உலகில் உள்ளன.

கடல்வாழ் உயிரினமாகவே கருதப்பட்ட ஜெல்லி மீன்கள், மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரியில் காணப்படும் ஜெல்லி மீன்கள் ‘அவ்ரெலியா அவ்ரிட்டா‘ என்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஜெல்லி மீன்களின் தோற்றத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு வேலூரில் இருந்து வந்த இஷான் ஆபிரகாம் என்ற 9 வயது மாணவன், கொடைக்கானல் ஏரியில் ஜெல்லி மீன்கள் இருப்பதைப் பார்த்து அதனை ஒரு குவளையில் நீருடன் எடுத்து சென்றான். 4–ம் வகுப்பு படிக்கிற இந்த மாணவன், உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவன். மாணவனின் தந்தை கிஷோர் பிச்சைமுத்து. இவர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஏரியில் எடுத்து வந்த ஜெல்லிமீன்களை, தனது தந்தை உதவியுடன் இஷான் ஆபிரகாம் ஆய்வுக்கு அனுப்பினான். இந்திய விலங்கியல் துறை முன்னாள் மேலாளர் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது, கடலில் மட்டுமே வாழ்வதாக வரலாற்றில் இருந்து வந்த இந்த ஜெல்லி மீன்கள் கொடைக்கானல் ஏரியில் இருப்பது தெரியவந்தது. இதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி ஏரியில் ஜெல்லிமீன்கள் இருப்பது கொடைக்கானல் நகரவாசிகளிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளியேறும் நீரோடைப் பகுதியான கல்லறை மேடு பகுதியில் வசிக்கிற மக்கள், பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இது, ஜெல்லி மீன்களின் பாதிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே ஏரியில் உள்ள ஜெல்லி மீன்கள் குறித்தும், அவற்றினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றியும் ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story