சிங்கம்புணரியில் உள்ள நல்லாகுளம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
சிங்கம்புணரியில் உள்ள நல்லாகுளம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து சர்வே எடுத்தனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் உள்ள நல்லாகுளம் ஏரி, நகரின் முக்கிய நீராதாரமாக இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் அந்த ஏரியின் அளவு சுருங்கிவிட்டது. இதனால் ஏரியை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகள் அகற்றவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நல்லாகுளம் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பின் அளவை கணக்கெடுக்க சர்வே செய்து அறிக்கை தர மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், நில அளவையர் ஆனந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் நல்லாகுளம் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து சர்வே செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து வருவாய் ஆய்வாளர் வினோத் கூறும்போது, நல்லாகுளம் ஏரி பகுதியில் பட்டா ஏதும் இல்லாமல் ஆக்கிரமித்தும், பட்டா இடத்துடன் சேர்த்து நல்லாகுளம் பகுதியை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து சர்வே செய்யப்பட்டது. இங்கு சர்வே ஆய்வு குறித்து மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றார்.
நல்லாகுளம் ஏரி பகுதியில் குடியிருப்போர் கூறியதாவது:– நல்லாகுளம் ஏரியை சுற்றி 130 குடும்பத்தினர் கடந்த 30 முதல் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஏரியில் தேங்கும் நீர் விவசாயத்திற்கும், குடிநீருக்கு உபயோகம் ஆவதில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நல்லாகுளம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய்கள் இல்லை. மழைநீர் மட்டுமே தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கும் மழைநீர் சாக்கடையாக மாறி நோய் தொற்றும் ஏற்படுத்தும் ஏரியாகவும் மாறி வருகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கம்புணரி அருகே உள்ள அரணத்தங்குண்டு கண்மாய் கரையில் குடியிருப்போருக்கும், மருதங்குண்டு ஊருணி அருகே ஆக்கிரமித்தவர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு உபயோகம் இல்லாத ஏரியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படாமல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.