400 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சி அமைக்க முடியாது
பேரையூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், 400 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சி அமைக்க முடியாது என்று நடிகர் ராதாரவி பேசினார்.
பேரையூர்
டி.கல்லுப்பட்டி ஒன்றியம், பேரையூர் பேரூர் தி.மு.க. கழக சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பணியில் வைரவிழாவை முன்னிட்டு பேரையூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார், பொருளாளர் ஞானசேகரன், டி.கல்லுப்பட்டி நகர செயலாளர் முத்துகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரையூர் நகர செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– வாக்காளர்களாகிய நீங்கள் பணம் பெற்றுக் கொண்டு ஒட்டுப் போடாதீர்கள், பணம் வாங்கி கொண்டு ஓட்டுப்போட்டால் பெற்ற தாயை விற்றதற்கு சமம். திராவிடம் இல்லாத தமிழகம் அமைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். தமிழகத்தில் ஒருசதவீதம் அளவிலேயே வளர்ந்துள்ள பி.ஜே.பி. இன்னும் 400 ஆண்டுகளானாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
திராவிடத்தை அழிக்க முடியாது. தி.மு.க. ஆடியோ மாதிரி, எதையும் கேட்டு, கேட்டு தெரிந்து பொதுமக்களின் நலனுக்காக செயல்படும். ஆனால் அ.தி.மு.க. வீடியோ மாதிரி, எதையும் பார்த்து, பார்த்து தான் தெரிந்து கொள்ளும். விவசாயிகளின் வாழ்வாதாரம் இல்லையென்றால் தமிழகமே இல்லை, விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன.
இப்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சி மோடியின் மகுடியாக இயங்கி வருகிறது. பாஸ்போர்ட், மைல்கல், போன்றவற்றில் எழுதி ஹிந்தியை திணிக்க மோடி அரசு முயற்சிக்கிறது, இதை தற்போது தள்ளாடி வரும் அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழை வளர்த்தும், தமிழனுக்காக குரல் கொடுக்கும் கருணாநிதியை நாமெல்லாம் வாழ்த்துவோம். செயல் தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் தி.மு.க. மாவட்ட நகர, கிளை கழக, நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.