மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வீட்டிற்கு பட்டா வழங்க கோரி கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
வீட்டிற்கு பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கோவில்பட்டி ராஜீவ்நகர் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் பல பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க காலதாமதமாவதால், மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. படித்த மாணவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். எனவே அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும். மழை காலத்திற்கு முன்பு தாமிரபரணி நதியை சுத்தப்படுத்திட, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மாதாநகர் கீழ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 36 வீடுகள் உள்ளன. நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. மேலும் நாங்கள் வீட்டு தீர்வை மின் இணைப்பு ஆகிய வரிகள் செலுத்தி வருகிறோம்.
தற்போது நாங்கள் இருக்கும் இடம் அரசு இடம் என்று கூறி, அங்கு இருந்து காலி செய்ய வேண்டும் என்று கடிதம் வந்துள்ளது. எங்களுக்கு வேறு இடம் கிடையாது. எனவே நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்களை அந்த இடத்தில் இருந்து காலி செய்ய கூடாது என்று கூறி இருந்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள மேலக்கானம் புதுமனையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் வசிக்கும் இடம் வனத்துறைக்கு பாத்தியப்பட்டது. நாங்கள் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடுகட்டி வசித்து வருகிறோம். நாங்கள் வனத்தை பாதுகாத்து வருகிறோம். எங்கள் பகுதியில் கழிப்பிட வசதி செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கழிப்பறை அமைத்திடவும், நாங்கள் இருக்கும் வீட்டுக்கு பட்டா பெறுவதற்கும் சான்றிதழ் தந்து உதவ வேண்டும் என்று கூறி இருந்தனர்.
மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் அய்யலுசாமி கொடுத்த மனுவில், கயத்தாறு தாலுகாவில் கடம்பூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தற்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகமும் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் புதிதாக வருவாய் ஆய்வாளர் கட்டிடத்தையும், கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தையும் புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கூறி இருந்தார்.
எட்டயபுரம் தாலுகா வாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவர் கொடுத்த மனுவில், நான் சுகாதார பாரத இயக்கத்தின் தனிநபர் கழிப்பறை திட்டத்தின்கீழ் கடன்வாங்கி கழிப்பறை கட்டிடம் கட்டினேன். அதன் பின்னர் கட்டிடத்தை புகைப்படம் எடுத்து கழிப்பறை கட்டிடம் கணக்கெடுக்கும் நபரிடம் வழங்கினேன். ஆனால் எனக்கு இதுவரை தனிநபர் கழிப்பறை கட்டியதற்காக மானிய தொகை வரவில்லை. எனவே அதற்கான மானிய தொகை கிடைக்க உதவ வேண்டும் என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி புதூர் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக செங்கல் சூளை உள்ளது. அங்கு கடந்த 1 மாதமாக ஆழ்துளை கிணறு அமைத்து வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கொடுத்த மனுவில், மத்திய அரசு அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைவது தான் சரியாக இருக்கும். இங்கு தான் தொழிற்சாலைகளும், விவசாய மக்களும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் அதிக அளவில் உள்ளனர். இங்கு தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் விபத்தில் சிக்கி கொண்டால், உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை இல்லை. சென்னைக்கு தான் செல்ல வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இட வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி ஆகியவை தூத்துக்குடியில் உள்ளது. எனவே தூத்துக்குடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறினார்.