சீரான குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கோத்தகிரி அருகே சீரான குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்கப்பட்டி கிராமத்தில் 45–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் மிளிதேன் கிராமத்தையொட்டி பெரிய சோலை பகுதியில் உள்ள ஓடையில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வசதி செய்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் சேதமடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பழைய குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததாலும், வனவிலங்குகளின் அட்டகாசத்தில் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் மேல்கப்பட்டி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் சீரான குடிநீர் வசதி செய்து தரக்கோரி காலிகுடங்களுடன் நேற்று காலை 11 மணிக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் நுழைவு வாயில் முன் அமர்ந்து கோஷங்களை எழுப்பியபடி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
எங்கள் கிராமத்துக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக பெரிய சோலை பகுதியில் உள்ள ஓடையே உள்ளது. முறையான பராமரிப்பின்றி குடிநீர் குழாய்கள் உடைந்து கிடப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீருக்காக பெண்கள் கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளியம்மன் கோவில் பகுதிக்கு சென்று தண்ணீர் சுமந்து வர வேண்டிய நிலை நிலவுகிறது. இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், நெடுகுளா ஊராட்சி செயலாளர் சதீஷ், உதவி பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக பழுதடைந்த குழாய்களை தற்காலிகமாக மாற்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புதிய குழாய்களை பதிக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஊராட்சி துணை இயக்குநர் பரிந்துரை மற்றும் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் புதிய குழாய்கள் பதித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.