வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம்
சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் எறையாமங்கலம் காலனியை சேர்ந்த ஏராளமான பெண்கள், தங்கள் பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலக வாசல் முன் படிக்கட்டில் அமர்ந்தபடி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
குடிநீர் வினியோகம்
எறையாமங்கலம் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக எங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம்.
எங்களுக்கு நுங்கம்பாக்கத்தில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக எங்களுக்கு குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை. எனவே அதனை மாற்றி இரும்பு குழாய்கள் அமைத்து எங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.
எங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருப்பதால் பாம்பு, தேள், விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விடுவதால் குழந்தைகள், பெரியவர்களை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வருகிறோம். இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து நாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், லதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவும், தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story