குட்டியை ஈன்ற 20 நாட்களில் பெண் யானை சாவு, வனத்துறை அதிகாரிகள் விசாரணை


குட்டியை ஈன்ற 20 நாட்களில் பெண் யானை சாவு, வனத்துறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 18 July 2017 2:30 AM IST (Updated: 18 July 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

உரிகம் வனப்பகுதியில் குட்டியை ஈன்ற 20 நாட்களில் பெண் யானை இறந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா உரிகம் வனப்பகுதியையொட்டி மஞ்சுகொண்டப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு யானைகள் அடிக்கடி வருவது வழக்கம். இந்தநிலையில் பிறந்து 20 நாட்களே ஆன குட்டியுடன் பெண் யானை ஒன்று அடிக்கடி சுற்றி வந்தது.

அந்த பெண் யானை, அப்பகுதியில் உள்ள சேற்று நீரை குடித்ததால் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வனப்பகுதியில் அந்த பெண் யானை நேற்று இறந்தது. இதை அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தீபக் வில்ஜி உத்தரவின் பேரில், மாவட்ட உதவி வன அலுவலர் பிரியதர்ஷினி, உரிகம் வனச்சரகர் திருமுருகன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பிறகு கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர்.

தாய் யானை இறந்ததும், அதன் குட்டி அந்த இடத்திலேயே சிறிது நேரம் சுற்றி திரிந்துள்ளது. இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த குட்டி உரிகம் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் 20 நாட்களே ஆன குட்டி யானை, தாய் யானையை இழந்து காட்டிற்குள் தவித்து வருகிறது.

மேலும், அது குட்டி யானை என்பதால் பிற யானைகள் அதை சேர்க்க தயங்கலாம் எனவும், அந்த குட்டி, பால் இன்றி தவிக்கும் நிலை ஏற்படலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த குட்டிக்கு பிற வன விலங்குகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக வனத்துறையினர் அதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் பெண் யானையின் சாவு குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை தாலுகா தொளுவபெட்டா கிராமத்திற்கு கடந்த மே மாதம் 4–ந் தேதி இரவு 5 யானைகள் வந்தன. அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு யானை பலாப்பழத்தை பறித்த போது மின்சார வயரில் துதிக்கை பட்டது. இதில் அந்த யானை மின்சாரம் பாய்ந்து பலியானது.

இந்த நிலையில் தடிக்கல் கிராமத்தில் அடுத்த சில நாட்களில் குட்டியானை ஒன்று தனியாக சுற்றித்திரிந்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட முயன்றனர். ஆனால் குட்டியானை காட்டிற்குள் செல்லாமல் மீண்டும் கிராமத்திற்குள் வந்தது. இதையடுத்து அய்யூரில் வனத்துறையினரால் அந்த குட்டியானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் தாய் தான், பலாப்பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது என விசாரணையில் தெரிய வந்தது.

தற்போது உரிகம் வனப்பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன குட்டியுடன் சுற்றிய பெண் யானையும், சேற்று நீரை குடித்து இறந்து விட்டது. அந்த குட்டியும் தாய் இன்றி தவிக்கிறது. 2½ மாதத்தில் அடுத்தடுத்து 2 குட்டி யானைகள், அதன் தாய்களை பறி கொடுத்து, வனப்பகுதியில் தவிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story