கோரையாறு–புதுஆத்தூர் கிராமங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோரையாறு மற்றும் புதுஆத்தூர் கிராமங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடியாக கலெக்டரை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கோரையாறு பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்களது ஊரில் கடந்த 6 மாத காலமாக தெருக்குழாயில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் எடுப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிய வேண்டியிருக்கிறது. மேலும் ஆழ்குழாய் கிணறும் வற்றி விட்டதால் குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து நீர்த்தேக்க தொட்டி மூலம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் பெரம்பலூர் அருகே லாடபுரம் ஊராட்சி புதுஆத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ரசலாபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில், ராமலிங்கபுரம், ரசலாபுரம், மாக்காயிகுளம், அருணகிரிமங்கலம் ஆகிய ஊர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரசலாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. கிராம நிர்வாக அலுவலகம் மாற்றப்பட்டால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது. எனவே ரசலாபுரம் கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குன்னம் தாலுகா நோவா நகரை சேர்ந்த வக்கீல் மானேக்ஷா கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கடந்த 2007–2008–ம் ஆண்டில் 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டம் செயல்பாட்டு வராததால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் ஒருபகுதியை தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மீதமுள்ள நிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட தமிழக அரசை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஊராட்சிகள் இணை இயக்குனர் பாலன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.