சென்னையில் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து வருகிறது
அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது.
சென்னை,
சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகங்கள்’ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கப்பட்டன.
மக்களின் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரி, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிற மாநகராட்சிகளிலும், அரசு ஆஸ்பத்திரி வளாகங்களிலும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ரூ.12 லட்சம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 7 அம்மா உணவகங்களும் சேர்த்து மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நுங்கம்பாக்கத்தில் (மண்டலம்-9) அதிகபட்சமாக 38 அம்மா உணவகங்கள் அமைந்துள்ளன.
தினமும் சராசரியாக 3 லட்சம் இட்லிகளும், 29 ஆயிரம் பொங்கல், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலவை சாதம், 2 லட்சம் சப்பாத்திகளும் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மூலமும், காய்கறிகள் திருவல்லிக்கேணி கூட்டுறவு பண்டக சாலையில் இருந்தும் பெறப்பட்டு வருகின்றன. தினமும் ரூ.12 லட்சம் அளவில் அம்மா உணவகங்கள் மூலம் சாப்பாடு விற்பனை ஆகிறது.
கூட்டம் இல்லை
பெருநகர சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் இப்போது தனது சிறப்பினை இழக்க தொடங்கியிருக்கிறது. வினியோகிக்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அம்மா உணவகங்களில் முன்பு போல கூட்டமும் காணப்படுவது கிடையாது.
இதனை உணவக ஊழியர்களும் ஒரு பொருட்டாகவே நினைத்து செயல்படுவது இல்லை. பாத்திரங்கள் கழுவும் இடமும், கை கழுவும் இடங்களும் அவ்வளவு சுத்தமாகவும் இருப்பது கிடையாது. இதனால் எந்த நோக்கத்தில் இந்த அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டதோ, அது நடக்காமல் போய்விடுமோ என்று கவலை எழுந்து உள்ளது. பல அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட வருபவர்களை அங்குள்ளவர்கள் அலட்சியமாக பேசுவதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
புகார் அளித்தும் பலனில்லை
ஏழை மக்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கினார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக அம்மா உணவகங்களை பராமரித்து வந்தனர். எனவே தரமான, சுத்தமான மற்றும் சுவையான உணவு இங்கு கிடைத்தது.
ஆனால் என்றைக்கு ஜெயலலிதா மறைந்தாரோ, அப்போதே அம்மா உணவகங்கள் மீதான அதிகாரிகள் பார்வை மந்தமாகி போய்விட்டது. உணவின் தரமும், சுவையும் குறைந்து விட்டன. குறிப்பாக இரவு நேரத்தில் வினியோகிக்கப்படும் சப்பாத்தியும், பருப்பு கரைசலும் மிகவும் மோசமாக இருக்கிறது. பல தடவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பலனில்லை. விலை மலிவு என்ற பெயரில் உணவின் தரம்-சுவை பாதித்தால், அம்மா உணவகம் செல்வதில் பயனே இல்லை. இதனால் வழக்கமான கூட்டம் தற்போது காணப்படுவது கிடையாது. எனவே இனியும் தாமதிக்காமல் அம்மா உணவகங்களில் தரமான சாப்பாடு கிடைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story