குடியிருப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் முற்றுகை
திருச்சி பாபுரோட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது திருச்சி கோட்டை பாபுரோடு பகுதியில் வசிக்கும் மக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வந்திருந்த அவர்கள் பாபு ரோடு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பள்ளிவாசல், கோவில், மற்றும் கடைவீதியில் 2 டாஸ்மாக் கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மதுபான கடைகளால் பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது, மது குடித்து விட்டு தெருக்களில் ஆபாசமாக பேசி சண்டை போடுபவர்களால் இந்த பகுதி மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை, மேலும் தாலிச்செயின் பறிப்பு, செல்போன் திருட்டு போன்ற சம்பவங்களும் நடக்கிறது. எனவே இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் உடனே மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிடவேண்டும் என கோரி அவர்கள் கோஷம் போட்டுக்கொண்டே கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாசலில் நின்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். திருச்சி மாநகராட்சி 57–வது வார்டுக்கு உட்பட்ட கோணக்கரை மின்சார சுடுகாடு அருகே 2 டாஸ்மாக் கடைகள் கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகின்றன. வருகிற ஆகஸ்டு 3–ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவை அய்யாளம்மன் படித்துறையில் கொண்டாட இந்த வழியாக தான் பெண்கள் மற்றும் புது மண தம்பதிகள் செல்வார்கள் என்பதால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க 3–ந்தேதி ஒரு நாள் மட்டும் இந்த இரு மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிடவேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மேற்கு பகுதி செயலாளர் பால முரளி மனு கொடுத்தார்.
திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் கிராமத்தின் அருகில் காவிரி ஆற்றின் தென் கரை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்கு தனி குவாரி அமைத்து தரவேண்டும் என கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். திருவெறும்பூர் தாலுகா அரசங்குடி, தொண்டான் பட்டி கிராம பொதுமக்கள் கிருஷ்ண சமுத்திரம் பத்தாள பேட்டை இடையே 3 கி.மீ தூரத்திற்கு தார்சாலை அமைத்து தரவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் ராஜேந்திரன் தலைமையில் வந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தவிடு தயாரிக்கும் ஆலையால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அந்த ஆலையின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சி மனு
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் பரமானந்தம், அமைப்பாளர் தங்கவேல் உள்பட நிர்வாகிகள் தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷம் போட்டுக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கமல்ஹாசன் உருவ படத்தை எரிக்க முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்து சமயம் மற்றும் தமிழ் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைகளின் மாவட்ட தலைமை அதிகாரிகளும் அவசியம் பங்கேற்கவேண்டும் என கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டு உள்ளார். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் விளக்கம் கேட்கிறார். சரியாக விளக்கம் அளிக்காத அதிகாரிகள் மற்றும் குறைகளை புரிந்து கொள்ள முடியாத அதிகாரிகளை கண்டிக்கும் கலெக்டர் பொதுமக்களின் குறைகளை காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் தீர்த்து வைக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை கூறி உள்ளார். செந்தண்ணீர்புரம் குமரன் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நீண்ட நாட்களாக பணியாளர் இல்லாததை சுட்டிக்காட்டி அந்த பகுதியை சேர்ந்த ஐக்கிய மக்கள் நல கழகத்தினர் கடந்த 10–ந்தேதி நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். கலெக்டர் எடுத்த உடனடி நடவடிக்கையின் பலனாக அங்கு பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.