பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை மூடி மறைக்க அரசு முயற்சி குமாரசாமி குற்றச்சாட்டு


பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை மூடி மறைக்க அரசு முயற்சி குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 July 2017 9:12 AM IST (Updated: 18 July 2017 9:12 AM IST)
t-max-icont-min-icon

ரூபாவை பணி இடமாற்றம் செய்ததன் மூலம் பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை மூடி மறைக்க அரசு முயற்சி செய்வதாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூரு சிறையில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே பகிரங்க மோதல்கள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரிகள் சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோர் ஆளுக்கு ஒரு அறிக்கைகளை தாக்கல் செய்கிறார்கள். யார் மீதும் யாருக்கும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

மங்களூருவில் கலவரம் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கவில்லை என்று கூறி போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா, உளவுத்துறை டி.ஜி.பி. எம்.என்.ரெட்டி மீது முதல்–மந்திரி சித்தராமையா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இப்போது தான் முதல்–மந்திரிக்கு ஞானஉதயம் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காக ரூபாவை அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. இது ஏற்கனவே நான் எதிர்பார்த்தது தான். ஆனால் 2 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பணி இடமாற்றம் நடந்த பின்பு மற்ற அதிகாரிகள் தங்களது துறைகளில் நடக்கும் முறைகேடுகளை எப்படி வெளிப்படுத்த முன்வருவார்கள். ஒரு வேளை தங்களது துறைகளில் முறைகேடுகள் நடந்தாலும், அதனை வெளியே கொண்டு வந்தால் தங்களுக்கும் பணி இடமாற்றம் கிடைக்கும் என்ற நிலையை அரசு தற்போது உருவாக்கி உள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவை பணி இடமாற்றம் செய்திருப்பதன் மூலம், பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை மூடி மறைக்க அரசு முயற்சி செய்வது தெளிவாகி உள்ளது. மேலும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களையும், தவறு செய்தவர்களையும் பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. இதனை மாநில மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளது. பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள், மங்களூருவில் கலவரம் உருவானது போன்ற காரணங்களால் போலீஸ் துறையே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story