பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது சரியல்ல


பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது சரியல்ல
x
தினத்தந்தி 19 July 2017 4:00 AM IST (Updated: 18 July 2017 10:29 PM IST)
t-max-icont-min-icon

பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது சரியல்ல என்று தர்மபுரியில் நடிகர் ராதாரவி கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி பகுதியில் நடைபெறும் பொறுக்கீஸ் என்ற புதிய சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசின் செயல்பாட்டை பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை. அரசை பற்றி விமர்சிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிமை உள்ளது. மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நடிகர் கமல்ஹாசனை தனிப்பட்ட முறையில் தமிழக அமைச்சர்கள் விமர்சிப்பதும், வழக்கு போடுவோம் என்று மிரட்டுவதும் சரியல்ல. கமல்ஹாசனுக்கு எப்போதும் நான் துணையாக நிற்பேன். தி.மு.க. வலுவிழந்து உள்ளதால் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனை பிடித்து கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தி.மு.க. என்றும் வலுவாக உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தான் தற்போது வலுவில்லாமல் உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான எந்தவித கோரிக்கையையும் வலியுறுத்தாமல் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்து உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஜி.எஸ்.டி. மசோதா போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கூட வைக்காமல் இந்த தேர்தலில் வாக்களித்திருப்பது மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அடிபணிந்துள்ளதை காட்டுகிறது.

தமிழகத்தில் மட்டும்தான் ஊழல் நடக்கிறது என்றில்லாமல் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி கொடுத்து கர்நாடகாவிலும் ஊழல் நடக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்து அந்த மாநிலத்திலும் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அதற்காக சசிகலாவை நான் பாராட்ட விரும்புகிறேன். இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவையும் நாம் பாராட்ட வேண்டும்.

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.விற்கு சரியான தலைமை இல்லை. அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் உள்ளன என்பதே தெரியவில்லை. கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பறிகொடுத்து விட்டனர். தற்போது தலையில்லாத முண்டமாக இருக்கிறது அ.தி.மு.க. முதுகெலும்பு இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. அ.தி.மு.க. தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க நிர்வாகி சிங்காரவேலு உடனிருந்தார்.


Next Story