கூத்தாநல்லூர் அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கடைவீதியில் மதுக்கடை உள்ளது. இந்த கடையினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுவதாக கூறி கடந்த மாதம் (ஜூன்) 25–ந் தேதி மதுக்கடை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 20 நாட்களுக்குள் மதுக்கடை மூடப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் அறிவித்தது போல கடந்த 15–ந் தேதி மதுக்கடையை மூடியிருக்க வேண்டும். ஆனால் மதுக்கடை மூடப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் பரஞ்ஜோதி, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று(அதாவதுநேற்று) முதல் வடபாதிமங்கலம் மதுக்கடை மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கூத்தாநல்லூர்–வடபாதிமங்கலம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.