மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி தாமிபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி, தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகளுக்கு போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நெல்லை,
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி, தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகளுக்கு போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தாமிபரணி ஆற்றில் அஞ்சலி நிகழ்ச்சிகடந்த 1999–ம் ஆண்டு ஜூலை மாதம் 23–ந் தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடிய போது, நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23–ந் தேதி நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்காக நினைவு தின நிகழ்ச்சியையொட்டி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்த அரசியல்கட்சிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் (குற்றப்பிரிவு) பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், உதவி கமிஷனர்கள் மாரிமுத்து, விஜயகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுப்பாடு விதிப்புகூட்டத்தில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் கட்சியினர் பாலத்தின் அருகே கோஷங்கள் எழுப்ப கூடாது, ஒவ்வொரு கட்சியினரும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.