3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்
புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதியக்குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்துவதோடு, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேக்டோ மற்றும் ஜியோ) சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜேக்டோ மாவட்ட தொடர்பாளர்கள் சந்திரசேகரன், ஜான்பீட்டர், ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முபாரக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், மருத்துவத்துறை ஆய்வுக்கூட நுட்புனர் சங்க மாநில தலைவர் செல்வக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.