புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை


புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 19 July 2017 3:45 AM IST (Updated: 19 July 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புவனகிரி,

புவனகிரி பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டனர். அப்போது பெண் பணியாளர் ஒருவரை, மேற்பார்வையாளர் ராஜகோபால் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் துப்புரவு மேற்பார்வையாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையறிந்த துப்புரவு பணியாளர்களில் ஒரு பகுதியினர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியனர்கள் நேற்று புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பெண் பணியாளரை, மேற்பார்வையாளர் ராஜகோபால் ஆபாசமாக திட்டவில்லை. அவரை பணியிடை நீக்கம் செய்தது கண்டிக்கதக்கது.

எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், மேலும் பொய்யான புகார் கொடுத்த அந்த பெண் பணியாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் வேணி, பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது துப்புரவு பணியாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கு இடையே உள்ள பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க.நகர செயலாளர் கந்தன், காங்கிரஸ் நகர செயலாளர் கிருஷ்ணன், ம.தி.மு.க. நகர செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story